தர்பார் – விமர்சனம்

0
11

ரஜினிகாந்தும், ஏ.ஆர்.முருகதாஸும் முதன் முதலாக இணையும் படம், பெரிய ஒரு இடைவெளிக்குப் பிறகு ரஜினி போலீஸ் வேடமேற்கும் படம் என்ற வகையில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாக்கி வெளியாகியுள்ள ‘தர்பார்’ அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா?

#DarbarReview

#Rajinikanth

கதை

மும்பையில் தொடர்ந்து நடந்து வரும் போதை மருந்து மாஃபியா மற்றும், பாலியல் தொழில் குற்றங்களை தடுத்து நிறுத்த டெல்லியில் இருந்து மும்பை போலீஸ் கமிஷனராக பணிமாற்றம் செய்யப்படுகிறார் ஆதித்யா அருணாசலம் (ரஜினிகாந்த்). மும்பை வந்த ஆதித்யா அருணாச்சலம் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளால் போதை மருந்து மாஃபியா தொழில் பெரிதும் பாதிக்கப்பட, அவர்கள் ஆதித்யா அருணாச்சலத்தை தீர்த்துக்கட்ட முயற்சிப்பதும், அந்த முயற்சிகளை ஆதித்யா அருணாச்சம் மற்றும் அவரது தலைமையிலான போலீஸ்காரர்கள் எப்படி முறியடித்து மும்பையில் போலீஸ் மீதிருந்த நம்பிக்கையின்மையை மீட்டெடுக்கிறார் என்பதே ‘தர்பார்’ படத்தின் கதைகக்ளம்!

படம் பற்றிய அலசல்

வழக்கமான போலீஸ், மாஃபியா கும்பல் கதைதான்! அதை ரஜினி என்ற மாஸ் ஹீரோவை வைத்து ஆக்‌ஷன், காமெடி, ஸ்டைல், ரொமான்ஸ் என்று இடைவேளை வரை விறுவிறுப்பாகவும், ஜாலியாகவும் கொண்டு சென்று ரசிக்க வைத்துள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இடை வேளைகு பிறகான திரைக்கதையில் முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யத்தை கொண்டு வரவில்லை. மும்பையில் டிரக் சம்ராஜ்யத்தை நடத்தி வந்த பெருந்தலைகளை எல்லாம் ஆதித்யா அருணச்சலம் ஒழித்துகட்டுகையில் அதில் உலக அளவிலான மாஃபியா கும்பல் தலைனவனாக இருக்கும் சுனில்ஷெட்டியின் மகனும் செத்துப் போகிறார். இதனால் ஆதித்யா ஆருணாச்சலத்தை பழிவாங்கவும் மும்பையை மீண்டும் தன் வசமாக்கவும் மும்பை வருகிறார் சுனில்ஷெட்டி! உலக அளவில் பெரிய மாஃபியா தலைவனாக இருக்கும் சுனில் ஷெட்டி ஏதோ பெரிதாக செய்ய போகிறார் என்று பார்த்தால், அவர் சொல்லும்படியாக எதையும் செய்யவில்லை. வழக்கமாக எதிர்பார்க்கும் கிளைமேக்ஸுடனேயே படம் முடிகிறது.

முதல் பாதியை போன்று இரண்டாம் பாதியையும் விறுவிறுப்பான காட்சிகளை அமைத்து திரைக்கதையில் ஒரு சில ட்விஸ்ட்களை வைத்தும், லாஜிக் விஷயங்களில் கொஞ்சம் கவனத்தை செலுத்தியும் இயக்கியிருந்தால் ‘தர்பா’ரை கொண்டாடியிருக்கலாம்! சந்தோஷ சிவனின் ஒளிப்பத்வு, அனிருத்தின் பின்னணி இசை, ஸ்ரீகர் பிரசாத்த்தின் படத்தொகுப்பு முதலான டெக்னிக்கல் விஷயங்கள் ‘தர்பாரு’க்கு கை கொடுத்திருக்கிறது என்று சொல்லும்விதமாக அமைந்துள்ளது அவர்களது பங்களிப்பு.

நடிகர்களின் பங்களிப்பு

ஆதித்யா அருணாச்சலம் என்ற பொலீஸ் கமிஷனாராக வரும் ரஜினிகாந்த் ‘I AM A BAD COP’ என வில்லன்களுக்கு எல்லாம் பயத்தின் உச்சத்தை காட்டுவதும் அவர்களுக்கு ஐடியாக்களை கொடுப்பதுமாக படம் முழுக்க நடிப்பில் அதகளம் பண்ணியிருக்கிறார்! அதிலும் குறிப்பாக சண்டை காட்சிகள், டான்ஸ், காமெடி என்று இப்படத்தில் நாம் பழைய ரஜினியை பார்க்கலாம். இண்டீரியர் டெகரேட்டர் லில்லியாக வரும் நயன்தாராவுக்கு கதையில் அவ்வளவு முக்கியத்துவமில்லை. ரஜினி தன் மகளுக்காக (நிவேதா தாமஸ்) நயன்தாரவை திருமணம் செய்ய முடிவு செய்து அவரை அப்ரோச் செய்யும் காட்சிகளில் லாஜிக் இல்லை என்றாலும் ரசிக்க வைக்கிறது. ரஜினியின் மகளாக வரும் நிவேதா தாமஸுக்கு நல்ல கதாபாத்திரம். ஹீரோயின் நயன்தாராவை விட மனதில் பதியும் படியான கேரக்டரில் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார் நிவேதா! ரஜினியின் உதவியாளராக வரும் யோகி பாபு வழக்கமாக கலகலப்புக்கு உதவியிருக்கிறார். வில்லன்களாக வரும் சுனில் ஷெட்டி, ப்ரதீக் பாபன், ஜதின் சர்னா, நவாப் ஷா ஆகியோரது பங்களிப்பும் குறிப்பிடும்படியாக அமைந்துள்ளது. இவர்களுடன் ஸ்ரீமனும் ஓரிரு காட்சிகளில் வந்து போகிறார்.

பலம்

1.ரஜினி

2. முதல் பாதி

3.யோகி பாபு, நிவேதா தாமஸ்

பலவீனம்

1.இரண்டாம் பாதி

2. லாஜிக் விஷயங்கள்

3. சுனில் ஷெட்டி கதாபாத்திர வடிவமைப்பு

மொத்தத்தில்

வழக்கமான கதை என்றாலும், அதில் ரஜினி என்ற மாஸ் ஹீரோவை வைத்து அவரது ரசிகர்களுக்கு முழு திருப்தி அளிக்கும் வகையிலான ஒரு படமாக ‘தர்பார்’ படத்தை இயக்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸ், முதல் பாதி மாதிரி இரண்டாம் பாதியையும் சுவரஸ்யமாக தந்திருந்தால் ‘தர்பார்’ படம் அனைவரிடத்திலும் ‘சும்மா கிழி…’ என்று பாராட்டு பெற்றிருக்கும்!

ரேட்டிங்  3.25*/5

Please Comment and Subscribe to Chennai Express